Monday 12 May 2014

ஓர் ஊதிய ஒப்பந்தத்தின் வர்க்க வாசிப்பு


ஓர் ஊதிய ஒப்பந்தத்தின் வர்க்க வாசிப்பு
ஆர்.கருமலையான்
1990களில் நெல்லை மாவட்டத் தில் கொடூராமான சாதிய மோதல்கள் நடைபெற்றன. இதில் ஏராளமான அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். சில பத்திரிகைகள் கூட அப்போது இந்த கொலைகளை கிரிக்கெட் ஸ்கோர் போல “நாள்தோறும் இந்தப்பக்கம்” இன்று இத்தனை பேர் சாவு ; ‘ அந்தப்பக்கம்’ இன்று இத்தனை பேர் சாவு என செய்திகள் வெளியிட்ட சோகம் நிகழ்ந்தது.
இடதுசாரி இயக்கங்கள் மட்டும் மக்கள் ஒற்றுமைக்கும், சமூக நல்லிணக்கத்திற்கும் தொழில் ரீதியாக இம்மாவட்டத்தின் பின்தங்கிய நிலை மையை போக்குவதற்கும் தொடர்ந்து போராடின. இந்த பின்னணியில் தான்நீதியரசர் மோகன் தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் - சாதிய மோதல் களை தடுக்க திட்டவட்டமான தொழில் வளர்ச்சிக்கான பல்வேறு வழிவகைகளை பரிந்துரை செய்தது. நவீன தாராளமயமும் 1990களில் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வந்தபின்னணியில் அந்நிய மூலதன வருகைக்கு இரத்தினக் கம்பளம் விரிக்கஆளும் வர்க்கமும் சகல ஏற்பாடுகளை யும் செய்துக் கொண்டிருந்த நேரம்.
நெல்லை மாவட்டத்தில் மதுரை கன்னியாகுமரி நெடுஞ்சாலையில் திருநெல்வேலிக்கு வடக்கே சுமார் 20 கி.மீ. தூரத்தில் கங்கைகொண்டான் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 2073.86 ஏக்கர் நிலத்தை தமிழக அரசு ஆர்ஜிதம் செய்து ஏற்கனவே மாநில தொழிற் வளர்ச்சிக் கழகத்திடம் (சிப்காட்) ஒப்படைத்திருந்தது. இதில் 1379.60 ஏக்கர் நிலத்தில் தொழில் வளர்ச்சி வளாகத்தை சிப்காட் உருவாக்கியது. 1998க்கு முன்னும், பின்னும் ஆட்சியில் இருந்த பி.ஜே.பி மற்றும் காங்கிரஸ் தலைமை யிலான அரசுகள் அந்நிய மூலதனம், பன்னாட்டு நிறுவனங்கள் நாடு முழுவதும் உழைப்புச் சுரண்டலை தங்குதடையின்றிசெய்திட அனைத்துஏற்பாடுகளையும் சட்டப்பூர்வமாக்கியது. இந்த அடிப்படையில் தான் சிறப்பு பொருளாதார மண்டலம் (ளுநுண) என்ற சுதந்திரப் பொருளாதார மண்டலத்தின் புதிய அவதாரம் தோன்றியது.
இங்கு தொழிலாளர் சட்டங்கள் அமல்படுத்த வேண்டியது இல்லை; நடப்பில் உள்ள அமலாக்க பிரிவுகளோ, தொழிற் சங்கமோ உள்ளே நுழைய கூடாது. நமது நாட்டிலேயே இது ‘ஒரு வெளிநாடு’ போன்ற அந்தஸ்து அளிக்கப்பட்டது. அப்போது தான் அந்நிய மூலதனம் பாதுகாப்பாக முட்டையிட, அடைகாக்க, குஞ்சுபொறிக்க முடியுமாம். இந்த மூலதனப் பெருக்கத்திற்கு கொள்ளை லாப பெருக்கத்திற்கு அனைத்து வசதிகளையும் மத்திய, மாநில அரசுகள் போட்டியிட்டு செய்தன.
இந்தச் சூழலில் தான் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போது தமிழகத்தில் ஆட்சியில் இருந்த தி.மு.க அரசிற்கும், ஏடிசி டயர் கம்பெனி என்ற பன்னாட்டு நிறுவனத்திற்கு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியது. கங்கை கொண்டான் சிப்காட்டில் உள்ள தொழிற் வளர்ச்சி வளாகத்தில் சுமார் 115 ஏக்கர் நிலம் அடிமாட்டு விலைக்கு 99 ஆண்டுகள் குத்தகைக்குக் கொடுப்பது; இந்த ஆலைப்பகுதி மட்டும் சிறப்புப் பொருளாதார மண்டலம் என அவசரப் பிரகடனம் செய்வது; ‘அத்தியாவசியப் பணி’ என அவசர அரசாணை வெளியிடுவது; தொழிலாளர் சட்டங்களை நிர்வகிக்க விசேஷ ஏற்பாடு; ஏற்கனவே கோகோ கோலாவிற்கு தாமிரபரணி தண்ணீரை தாரைவார்த்த சிப்காட் இந்த டயர் கம்பெனிக்கு தாராளமாக வழங்கும்; 100 சதம் ஏற்றுமதி சார்ந்த நிறுவனம் என்ற முறையில் மத்திய- மாநில அரசுகள் வரிச்சலுகைகள் அனைத்தும் வாரிவழங்கும் என முடிவாகியது. அனைத்தும் அந்நியச் செலவாணியை பெருக்க என ஆனந்த சர்மாக்களும், சிதம்பரங்களும் கூறினர். 2009ம் ஆண்டு இந்த ஏடிசி டயர்ஸ் கம்பெனி செயல்படத் துவங்கியது. ஆரம்பத்தில் 400 கோடி ரூபாய் மூதலீடு செய்யத் திட்டம் தயாராகியது. இந்த ஏடிசி டயர்ஸ் நிறுவனம் என்பது சாலையில்லா காடுகள், கழனிகள், சுரங்கங்களில் பயன்படுத்தப்படும் கனரக வாகனங்கள், டிராக்டர்கள் போன்றவற்றிற்கான ராட்சச டயர்களை உற்பத்தி செய்வதில் உலகிலேயே பிரசித்தி பெற்றது.
இந்தியாவில் பால கிருஷ்ணா டயர்ஸ் என்ற கம்பெனியை சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக நடத்திய அசோக் மற்றும் யோகேஷ் மகன்ஷாரியா குழுமம் தனது தொழில் முனைவோர் அறிவைக்கொண்டு, இஸ்ரேலிய தொழில் நுட்பத்தோடு இணைந்து, அமெரிக்க மூதலீட்டு நிறுவனங்களின் மூல தனத்தோடு சங்கமமாகி பிறந்தது தான் ஏடிசி டயர்ஸ் கம்பெனி.ஆரம்பத்தில் 1000க்கும் மேற்பட்ட தொழிலாளிகள்; அனைவரும் ஒப்பந்தத் தொழிலாளிகள்; கங்கை கொண்டான் கிராமத்தைச் சுற்றிய சுமார் 20க்கும் மேற்பட்ட இளந்தொழிலாளிகள்; தாமிரபரணி கருணையை இழந்த இந்த கிராமங்களின் முதல் தலைமுறை தொழிலாளிகள்; பெரும்பாலோர் 25 வயதுக்குட்பட்டவர்கள்; சம்பளம் நாளொன்றுக்கு ரூ. 85 முதல் ரூ. 100வரை; 12 மணி நேரத்திற்கு மேல் உழைப்பு; போதாக்குறைக்கு வடபுலத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இதைவிட குறைந்த கூலிக்கு கூடுதல் நேரம் வேலை செய்ய தயாராகியிருந்தனர்; டயர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் ரசாயன மூலப்பொருட்களின் நெடி; இதற்கு மத்தியில் தான் இந்த நவீன கொத்தடிமைகள் உழைக்க வேண்டும். நாட்டில் எந்த ஒரு சட்டமும், இவர்களை பாதுகாக்க எட்டிப்பார்க்க முடியாது.
18ம் நூற்றாண்டில் தொழிற் புரட்சியை அடுத்த இங்கிலாந்து நாட்டின் பாட்டாளி வர்க்கம் பற்றி ஏங்கெல்ஸ், இ.பி. தாம்ஸன் மற்றும் பேரா. எரிக்ஹாப்ஸ்பாம் போன்றவர்களின் வர்ணணையை ஒத்த நிலைமையை இங்கு காண முடிந்தது. இந்த நிலைமைகளை சித்தரிக்க ஒரு சார்லஸ் டிக்கன்சும், சார்லி சாப்ளினும் இல்லை என்ற ஏக்கம் அவ்வப்போது நிழலாடுவதுண்டு.இந்தப் பின்னணியில் தான் இந்த தொழிலாளிகளில் சிலர் இந்த கட்டுரையாளரோடு(அப்போதைய நெல்லை மாவட்ட சிஐடியு செயலாளர்) தொடர்பு கொண்டு கொடுமைகளை விளக்கினர். தனது உள்ள கொதிப்பை- சுரண்டலின் உச்சத்தை விவரித்தனர். அவசரப்பட வேண்டாம், தக்க சமயத்தில் வினையாற்ற துவங்கலாம் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம்.
அலைபேசி எண்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.2010ம் ஆண்டு மார்ச் மாதம் கடைசி வாரத்தில் ஒரு வடமாநில மேலதிகாரி ஒரு தொழிலாளியை கொச்சையான வார்த்தைகளால், பழைய பிரிட்டிஷ் லங்காஷயர் மேஸ்திரி போன்று திட்டித் தீர்த்து விடுகிறான். மற்றொரு இந்திக்கார தொழிலாளி ( தமிழை அரைகுறையாக கற்றுக் கொண்டவர்) தனது சகோதரர் தமிழ் தொழிலாளிக்கு நேர்ந்த அவ மானத்தை பொறுக்கமாட்டாமல் மொழி பெயர்த்து சொல்லிவிடுகிறார்.ஏற்கனவே வெதும்பிக் கொண் டிருந்த, அடங்கிக் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒன்றாகச் சேர்ந்து கொண் டது. ஆலை முழுவதும் உள்ள 1000க் கும் மேற்பட்ட தொழிலாளிகளும் தன் னெழுச்சியான போராட்டங்களில் இறங்கிட்டனர். உடனே லோக்கல் கரை வேட்டி கட்சிக்காரர்கள் வருகின்றனர்; காவல்துறையும் வருகிறது; காரியமாக வில்லை. போராட்டம் தீவிரமடைகிறது. கட்டுரையாளரின் அலைபேசி எண் ணை கார்பன் கரியும், ரப்பரும், கருப் பாக்கியது போக மீதம் இருந்த துண்டு சீட்டிலிருந்து ஒரு தொழிலாளி கண்டு பிடித்து தொடர்பு கொள்கிறார். அடுத்த அரைமணி நேரத்தில் சிஐடியு அங்கு இருக்கிறது.
சிஐடியு தலை வர்களை கண்டவுடன் கழகங்களின் கரைவேட்டிகள் பின்வாங்கின. காவல்துறை மட்டும் சற்று நேரம் ‘சட்டம்’ குறித்து சண்டப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தது. சுட்டெரிக்கும் வெயில்; அந்த 2500 ஏக்கரிலும் பாஞ்சாலங்குறிச்சி உடைமுள் மரம் ஒன்றிரண்டு தவிர ஒதுங்கி நிற்க எதுவும் இல்லை. தொழிலாளிகள் அனைவரும் அந்த பட்டப் பகல் வெயிலில் அந்த பொட்டல் காட்டு ‘பொதுக்குழுவில்’ சிஐடியுவில் சேர தீர்மானித்து விட்டனர். நிலைமையை பார்த்து சுதாரித்த காவல் துறை பின்வாங்கியது.போராட்டம் புதிய பரிணாமம் பெற்றுவிட்டது. எட்டு மணி நேர வேலை, சம்பள உயர்வு, பணிநிரந்தரம், குடிநீர் வசதி, கழிப்பறை ஏற்பாடுகள், அடையாள அட்டை, ஈஎஸ்ஐ, பிஎப் எனகோரிக்கை பட்டியல்கள் உருவாகி விட்டன. 53 நாட்கள் தொடர் வேலை நிறுத்தம்.
வேலை நிறுத்தத்தை உடைக்க உள்ளூர் கைக்கூலிகளின் உதவியை நாடியது நிர்வாகம், இது போதவில்லை என சிறப்புப் பொருளாதார மண்டல அதிகாரிகளையும் அணுகியது. ஒன்றும் பலிக்கவில்லை என்று தெரிந்தவுடன் நிர்வாகம் காலவரையின்றி கதவடைப்பு செய்துவிட்டது. இரண்டு மாதங்கள் அந்த போராட்டத்தை நிலைபெறச் செய்ய நெல்லை மாவட்டத் தொழிலாளி வர்க்கம் துணை நின்றது. மீனாட்சிசுந்தரம், சுப்பிரமணியம் போன்ற 15 தொழிலாளிகள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். கிராமம் கிராமமாக தொழிலாளிகளின் ‘சிறப்புப் பேரவை’ கூட்டங்கள், வீடுவீடான சந்திப்புகள் நடத்தி தைரியப்படுத்தப்பட்டனர். இறுதியாக போராட்டம் வெற்றிபெற்றது. எட்டுமணிநேர வேலை, 10 ரூபாய் சம்பள உயர்வு, ஈஎஸ்ஐ, பிஎப் ஏற்பாடுகள் மிகைநேர பணிக்கு அற்பமான கூடுதல் ஊதியம், குடிநீர், கழிவறை ஏற்பாடுகள் என கோரிக்கைகள் கொஞ்சம் கொஞ்சமாக அமலாகத் துவங்கியது. நிர்வாகம் நிலைமையை புரிந்து கொண்டு இடையில் ஒரு சமரச ஏற்பாட்டிற்கு உடன்பட்டது. காண்ட் ராக்ட் தொழிலாளிகள் படிப்படியாக நிரந்தரமாகினர்.
அடுத்து இரண்டு ஆண்டுகள் பழகுநர், அடுத்த 6 மாதம் தகுதிகாண் பருவம், பின்னர் நிரந்தரத் தொழிலாளி என்ற அந்தஸ்து படிப்படியாக தொழிலாளியின் கனவு நனவாக துவங்கியது. முதன்முதலாக கடந்த அக்டோபர் மாதம் 158 பேர் நிரந்தரமாகினர். 85 ரூபாய் ஊதியம் 280 ரூபாயிலிருந்து 300 ரூபாயாக இந்த மூன்று ஆண்டுகளில் உயர்ந்தது. இந்தச் சூழ்நிலையில் தான் கடந்த ஏப்ரல் மாதம் 30ந் தேதி நிரந்தரத் தொழிலாளிகளுக்கும், அடுத்து நிரந்தரம் ஆகும் தொழிலாளிகளுக்கு பழகுனர்க்கும், தகுதிகாண் பருவத் தொழிலாளிக்கும் ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியது. இதன்படி கூடுதலாக ஒவ்வொரு தொழிலாளிக்கும் ரூபாய் 6800/லிருந்து 7,000/ வரை கிடைக்கும். அதாவது சராசரி 550 ரூபாயிலிருந்து 630 ரூபாய் வரை நாளொன்றுக்கு சம்பளம் கிடைக்க ஒப்பந்தம் ஆகியது. காண்ட்ராக்ட் தொழிலாளிகளுக்கு ஆண்டுக்கு ரூபாய் 1000/ கூடுதலாகக் கிடைக்கும்.
சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் சிஐடியுவிற்கு சங்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுவிட்டது. இதர சட்டப்பூர்வமான சலுகைகளும் வழங்க நிர்வாகம் ஒத்துக் கொண்டது மூன்று ஆண்டுக்கால ஒப்பந்தம். இவை அனைத்திலும் அயராது அலைந்த நெல்லை மாவட்ட சிஐடியு தலைவர்கள், ஆர். மோகன், எம். ராஜாங்கம், எம். சுடலைராஜ், எஸ். வெங்கட்ராமன், பி. முத்துக்கிருஷ்ணன் மற்றும் ஆலைமட்ட தலைவர்கள் சக்திவேல், ராஜன் ஆகியோரின் பங்களிப்பும் ஈடுபாடும் அளப்பரியது. தொழிலாளிகள் வர்க்க ஒற்றுமையின் பலனை தற்போது ருசிக்கத் துவங்கி விட்டனர்.
தென்கறை- தாழ்த்தப்பட்ட தொழிலாளியும், சீவலப்பேரி பிற் படுத்தப்பட்ட தொழிலாளியும், தாழை யூத்து இஸ்லாமியத் தொழிலாளியும், அனைத்தலையூர் கிறிஸ்துவத் தொழிலாளியும், ஜார்க்கண்ட் பிர்ஷ முண்டாவின் வாரிசுகளான ஆதிவாசி வகுப்பை சார்ந்தவரும் முதலில் ஒரே டம்ளரில் டீ குடிக்க துவங்கினர். பின்னர் கேன்டீனில் சமமாக சாப்பிட ஆரம்பித்தனர். தற்போது இவர் வீட்டுதிருமணத்திற்கு அவரும், அவர்வீட்டு திருமணத்திற்கு இவரும் பந்தி பரிமாறிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் மத்தியில் மறு வீட்டு விருந்து / அழைப்புகளும், அதிகரித்துவிட்டன.
இந்த ஒற்றுமையை கூலி உயர்வு போராட்டம்உழைப்பிற்கும் மூலதனத்திற்குமிடையிலான போராட்டம் தான் உருவாக்கி உள்ளது. அது அப்படித்தான் உருவாக்க முடியும். அதோடு நின்று விடாமல் மூல தனத் தோடு மோதி தீர்க்க வேண்டிய முழு போருக்கு இவர்களின் ‘ உணர்வு நிலை யை’ உயர்த்த வேண்டிய பொறுப்பும் கடமையும் நம்முன் உள்ளது
கட்டுரையாளர் : சிஐடியு, உதவிப் பொதுச் செயலாளர்
தீக்கதிர்  11/05/2014

No comments:

Post a Comment