Thursday 12 September 2013

மான்டேக் சிங் அலுவாலியா நம்பிக்கை-

நடப்பு 2013–14–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை 3.8 சதவீதமாக குறைக்க முடியும் மான்டேக் சிங் அலுவாலியா நம்பிக்கை-

 நடப்பு நிதி ஆண்டில் (2013–14) மொத்த உள்நாட்டு உற்பத்தியில் நடப்பு கணக்கு பற்றாக்குறையை 3.8 சதவீதமாக குறைக்க முடியும் என திட்டக்குழு துணை தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தெரிவித்துள்ளார். இது, சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் 4.8 சதவீதமாக இருந்தது.
அன்னிய செலாவணி
நடப்பு கணக்கு பற்றாக்குறை என்பது அன்னியச் செலாவணி வெளியேற்றத்திற்கும், வரவுக்கும் இடையில் உள்ள வித்தியாசமாகும். கடந்த 2011–12–ஆம் நிதி ஆண்டில் இது 7,820 கோடி டாலராக இருந்தது. இது அந்த நிதி ஆண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.2 சதவீதமாகும்.
இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மந்தநிலையால் நாட்டின் ஏற்றுமதி சரிவடைந்தது. தங்கம், கச்சா எண்ணெய் போன்றவற்றால் இறக்குமதி மிகவும் உயர்ந்தது. இதனையடுத்து சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 8,800 கோடி டாலராக அதிகரித்து மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.8 சதவீதமாக உயர்ந்தது.
7,000 கோடி டாலர்
நடப்பு நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை 7,000 கோடி டாலராக குறையும் என அலுவாலியா நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.8 சதவீதமாக இருக்கும். இவரது கருத்துக்கு வலுச் சேர்க்கும் வகையில் ஆகஸ்டு மாதத்தில் சரக்குகள் ஏற்றுமதி இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 12.97 சதவீதம் அதிகரித்து 2,614 கோடி டாலராக உயர்ந்துள்ளது. அதேசமயம், இறக்குமதி 0.68 சதவீதம் குறைந்து 3,700 கோடி டாலராக சரிவடைந்தது.
இதனையடுத்து சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை நான்கு மாதங்களில் இல்லாத அளவிற்கு 1,091 கோடி டாலராக குறைந்தது. 2012 ஆகஸ்டில் வர்த்தக பற்றாக்குறை 1,417 கோடி டாலராக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது பற்றாக்குறை 23 சதவீதம் குறைந்துள்ளது.
தங்கம் இறக்குமதி குறைந்தது
நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரிப்பிற்கு கச்சா எண்ணெய், தங்கம் இறக்குமதி அதிகமாக உள்ளது முக்கிய காரணமாகும். இந்த பற்றாக்குறை அதிகமாக உள்ளதால் ஆகஸ்டு மாதத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வரலாறு காணாத அளவிற்கு 68.85–ஆக சரிவடைந்தது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் ரூபாய் மதிப்பு 19 சதவீதம் சரிவடைந்தது. இதனால் சமையல் எண்ணெய், பருப்பு, கச்சா எண்ணெய் இறக்குமதி செலவினம் அதிகரித்து பணவீக்கம் உயர்ந்து பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே, தங்கம் இறக்குமதியை கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு அதன் மீதான இறக்குமதி வரியை இந்த ஆண்டில் இதுவரை மட்டும் மூன்று முறை உயர்த்தி 10 சதவீதமாக அதிகரித்தது. தங்க நாணயங்கள் மற்றும் பதக்கங்கள் இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்கிகள் தேவைப்பாட்டின் அடிப்படையில் மட்டுமே தங்கத்தை இறக்குமதி செய்ய வேண்டும் என ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.
இந்த முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்க தொடங்கியுள்ளது. இதனை உறுதிப்படுத்துகின்ற வகையில் ஆகஸ்டு மாதத்தில் தங்கம் இறக்குமதி 65 கோடி டாலராக குறைந்துள்ளது. இது, ஜூலை மாதத்தில் 220 கோடி டாலராக இருந்தது. இதனுடன் ஒப்பிடும்போது இறக்குமதி 70 சதவீதம் குறைந்துள்ளது.
இந்தியா முதலிடம்
தங்கத்தை அதிக அளவில் இறக்குமதி செய்வதில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சென்ற 2012–13–ஆம் நிதி ஆண்டில் தங்கம் இறக்குமதி 830 டன்னாக இருந்தது.
இந்நிலையில், பாரத ரிசர்வ் வங்கியின் புதிய கவர்னராக பொறுப்பேற்றுள்ள ரகுராம் ராஜன் டாலர் வெளியேற்றத்தை குறைத்து, வரத்தை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஓர் அங்கமாக, வங்கிகளுக்கு வெளிநாடுகளில் கடன் திரட்டும் விதிமுறை தளர்த்தப்பட உள்ளது. முன்னதாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் வங்கிகளில் மேற்கொள்ளும் டெபாசிட்டிற்கான விதிமுறைகளிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
ஓரளவு குறையும்
இதுபோன்ற காரணங்களால் வெளிநாடுகளிலிருந்து 2,000 கோடி டாலர் இந்தியாவிற்கு வரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த நிதி ஆண்டில் நடப்பு கணக்கு பற்றாக்குறை ஓரளவிற்கு குறையும் என சில பொருளியல் நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment